உபுண்டு – இது யுனிக்ஸ்யை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட ஒரு இயங்குதளம் (Operating System). இது கட்டற்ற (Free Software) மற்றும் திறந்த மூல (Open Source) மென்பொருட்களைக் கொண்டு உருவாக்கப் பட்ட இயங்குதளம். எண்ணற்ற வல்லுனர்களின் துணையால் இன்று ஆலமர வளர்ச்சி அடைந்து நிற்கின்றது. இதனைப்பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே சுட்டுக - > உபுண்டு.
இந்த உபுண்டு இயங்குதளம் முழுமையாகத் தமிழில் கிடைக்க தமிழார்வம் கொண்ட ஒரு குழு இயங்கி வருகின்றது. உபுண்டு தமிழ் குழுமம் இதன் பெயர். கணிப்பொறியியல் துறையைச் சார்ந்த, சாராத சிலரின் கூட்டு முயற்சியே இந்த குழுமம். வாரம் இரு முறை இணையத்தின் உதவியால் இவர்களின் கருத்துப் பரிமாற்றம் நடைபெற்று வருகின்றது. இந்த இயங்குதள உருவாக்கத்தின் முதல் முயற்சியாக உபுண்டுவினுள் உள்ள அனைத்து ஆவணங்களையும் தமிழுக்கு மொழி மாற்றம் செய்யும் வேலையில் ஈடுபட்டுள்ளது இந்த குழுமம். தமிழார்வம் கொண்ட எவரும் இந்த குழுமத்தில் சேரலாம். இந்த செய்தி இன்னும் பல தமிழார்வம் கொண்டவர்களின் செவிகளுக்கு எட்டுமாறு செய்யுங்கள். மேலும் விவரங்கள் அறிய இங்கே சுட்டுக – > உபுண்டு தமிழ். இனி என் வலைப்பதிவில் உபுண்டு தமிழ் வலைப்பதிவிற்கென ஒரு சுட்டி நிரந்தரமாக இருக்கும்.
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்கும் காணோம்
பாமரராய் விலங்குகளாய் உலகனைத்தும்
இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு
நாமமது தமிழரெனக் கொண்டிங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்.
பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தற் வேண்டும்
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை யில்லை
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்.
- மகாகவி சுப்பிரமணிய பாரதியார்
