களஞ்சியம்

பார்த்தது… கேட்டது… படித்தது…

ஆடவரி மாடலக்கு அர்தாலே வெறுலே…

Posted by ரத்தன் மேல் மே 3, 2007

பதிவோட தலைப்ப பாத்தவொடனே என்னாடா இது தமிழ் மாதிரியே தெரியலேன்னு முழுக்கறீங்களா! நீங்க முழிக்கறது நியாயம் தாங்க. இது தமிழ் இல்ல, சுந்தரத் தெலுங்கு. சமீபத்துல ரிலீஸான தெலுங்கு படத்தோட டைட்டில் தான் இது. படத்தோட டைரக்டர் வேற யாரும் இல்லங்க, நம்ம செல்வராகவன் (தெலுங்குல ஸ்ரீராகவன்) தான். போன வாரம் ரிலீஸ் ஆகி  செம போடு போட்டுக்கிட்டு இருக்காம் இந்த படம். ஹீரோவா வெங்கடேஷ், ஹீரோயினா த்ரிஷா. இத தவிர ரோஜாக்கூட்டம் ஸ்ரீகாந்த், காமெடிக்கு சுனில், சாமி வில்லன் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் எல்லாம் நடிச்சிருக்காங்க. இசை வழக்கம்போல யுவன் தான்.

amavrev2704_3c.jpg

இதே படத்த தான் யாரடி நீ மோகினி ன்னு தமிழ்ல எடுக்கராறு செல்வராகவன்கிட்ட உதவி இயக்குனரா இருந்த ஜவஹர்.  வெங்கடேஷ் கதாப்பாத்திரத்துல தனுஷ், த்ரிஷா கதாப்பாத்திரத்துல நயன்தாரா, ஸ்ரீகாந்த் கதாப்பாத்திரத்துல கண்ட நாள் முதல் புகழ் கார்த்திக் நடிக்கறதா இது வரயும் சொல்லிருக்காங்க. சாயாசிங் கூட ஒரு ரோல்ல நடிக்கறதா பேச்சு அடிபடுது.  தெலுங்கு படத்தோட கதைய இணையத்துல படிச்சேன். எப்படியும் இதே கததான் தமிழ்லயும் வரப்போகுதுங்குற தெனாவட்டுல (படத்தோட ரிலீஸுக்கு முன்னாடி) கதய லீக் பண்ணலாமேன்னு தான் இந்த முயற்சி 😉 .

yar1.jpg

கதை: 

வெங்கடேஷ் (கணேஷ்) வேல தேடிக்கிட்டுருக்குற ஒரு இளைஞன்.  இவரோட அப்பா கோட்டா ஸ்ரீனிவாச ராவ் ஒரு வாத்தியார்.  வெங்கடேஷ அம்மா ஸ்தானத்துல இருந்து இவர் பாத்துக்கராரு. கணேஷோட ஃபிரண்ட்ஸ் எல்லாரும் நல்ல வேலைல செட்டில் ஆகிடறாங்க. ஆனா கணேஷ் மட்டும் கிட்டதட்ட பத்து வருஷமா (அடேங்கப்பா!)  வேல தேடுறாரு. வேல  தேடிக்கிட்டுருக்கற சமயத்துல இவரோட கண்ல த்ரிஷா (கீர்த்தி) படவே… இவருக்கு காதல் பொத்துக்கிட்டு வந்திடுது.  விசாரிச்சு பாத்து, கீர்த்தி ஒரு சாப்ட்வேர் கம்பெனில வேல பாக்கறாங்கன்னு தெரிஞ்சுக்கராரு கணேஷ். உடனே அவரும் மல மலன்னு கம்பியூட்டர் கத்துக்கிட்டு அதே கம்பெனில வேலைக்கு ட்ரயினியா சேர்றாரு (அடப்பாவிகளா!).  நெனச்சபடி கீர்த்தியோட ப்ராஜெக்ட்லயே சேர்றாரு. கீர்த்தி அதாவது த்ரிஷா தான் ப்ராஜெக்ட் மேனஜராம் (ப்ளீஸ், யாரும்  கோவப்படாதீங்க!).  படம் பாக்கற சாப்ட்வேர் மக்கள் எல்லாரும் யாரு காதுலடா பூ சுத்துறீங்க ன்னு கேக்கறாங்களாம். அந்த  அளவுக்கு எந்த ஒரு சாப்ட்வேர் கம்பெனிலயும் நடக்காத  விஷயத்தெல்லாம் காட்டிருக்காங்களாம். நம்ம ஹீரோ மட்டும் ப்ராஜெக்ட்காக ராத்திரியெல்லாம் கண்ணு முழுச்சு வேல பாக்கற மாதிரி காட்சியெல்லாம் இருக்காம்.

soft.jpg

கணேஷுக்கும், கீர்த்திக்கும் கம்பெனி மூலமா ஆஸ்ட்ரேலியா போக வாய்ப்பு கிடைக்குது (இதெல்லாம் சாப்ட்வேர் வாழ்க்கைல சகஜமப்பா 😆 ). இதாண்டா சமயம்னு தன்னோட காதல கீர்த்திகிட்ட சொல்றாரு கணேஷ். அத கேட்ட கீர்த்தி தனக்கு ஏற்கனவே தன்னோட மாமாவோட  நிச்சயம் ஆயிடிச்சுன்னு சொல்லி, மனசுல வீணா ஆசய வளத்துக்க வேண்டாம்னு வழக்கமான டயலாக் பேசறாங்க.  இத கேட்ட கணேஷ் ரொம்பவே மனசொடஞ்சு போயி தன்னோட அப்பாகிட்ட நடந்தத சொல்றாரு. தன்னோட மகன் ஆசப்பட்ட வாழ்க்கய அமச்சு கொடுக்கனும்னு அப்பா கீர்த்திக்கிட்ட போய் பேசுறாரு. இதனால கோவம் வந்து கணேஷயும், அவங்க அப்பாவயும் கீர்த்தி கை நீட்டி அடிச்சுடறாங்க.  அன்னக்கி ராத்திரி கணேஷோட அப்பா மாறடைப்பால இறந்து போயிடறாரு. கணேஷ் தனிமரமா அயிடுறான். கணேஷ் கவலய மறக்கடிக்க அவரோட ஃப்ரண்ட் வாசு (ஸ்ரீகாந்த்) கணேஷ தன்னோட ஊருக்கு கூட்டிட்டு போறாரு. அங்க போனதுக்கு அப்பறம் தான் வாசு கீர்த்தியோட மாமான்னு கணேஷுக்கு தெரிய வருது. ஒரு கட்டத்துல வாசுவோட தங்கச்சிக்கு கணேஷ் மேல காதல் வளர, அத ஏத்துக்க் முடியாத கீர்த்தி தன்னோட காதல கணேஷ்கிட்ட சொல்றாங்க. ஆனா தியாகி கணேஷ் தன்னோட காதலால சந்தோஷமா இருக்குற இந்த குடும்பத்துல பிரச்சன வேண்டாம், என்ன மறந்துடுன்னு சொல்றாரு.  இது  எப்படியோ வாசுவோட தாத்தாவுக்கு தெரியவர குடும்ப மானத்த கப்பலேத்திட்டியேன்னு கீர்த்திய திட்டுறாரு. இதுக்கு அப்பறம் யார் யாரோட சேர்றாங்கிறது  தான் க்ளைமாக்ஸாம்.

 படத்துல கணேஷ் கதாப்பாத்திரத்துக்கு நடிக்க நல்ல வாய்ப்பு இருக்காம். தனுஷ் கண்டிப்பா பிண்ணிருவாரு. ஆனா பத்து வருஷமா வேல தேடுற லாஜிக்கெல்லாம் அவருக்கு ஒத்து வராது. ஜவஹர் சார், இந்த மாதிரி விஷயத்தெல்லாம் கொஞ்சம் மாத்திருங்க ப்ளீஸ்!

கிட்டத்தட்ட எல்லா பத்திரிக்கைலயும் குடும்பத்தோட பாக்க வேண்டிய நல்ல படம்னு விமர்சனம் பண்ணிருக்காங்க. என்னாது! செல்வராகவன் படம் குடும்பத்தோட போய் பாக்கலாமா ன்னு  வாயப்பொளக்காதீங்க 🙂 . கல்யாணம் ஆனதுக்கு அப்பறம் மனுஷன் திருந்திட்டார் போலத் தெரியுது.  குடும்பஸ்தன் ஆயிட்டதனாலயோ என்னமோ வழக்கமா அவர் படத்துல வர்ற விரச காட்சி எதுவுமே இந்த படத்துல இல்லியாம். படத்துக்கு சென்சார் U சான்றிதழ் குடுத்திருக்காங்களாம். செல்வராகவன் படத்துக்கு U சான்றிதழா?  கேக்கவே ஆச்சர்யமா இருக்குல்ல 😉 . தமிழ்ல படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் ஜவஹர் சார்.

Advertisements

Posted in சினிமா, திரைப்பார்வை | 11 Comments »

ரம்மிய ரிங்டோன்

Posted by ரத்தன் மேல் ஏப்ரல் 29, 2007

உங்க மொபைல் mp3 ரிங்டோன் சப்போர்ட் பண்ணுமா? அப்ப இது உங்களுக்கு தேவைப்படலாம். சமீபத்துல நான் ரொம்ப ரசிச்ச மூனு சினிமா பாட்ல வர்ற ரம்மியமான பின்னனி இசைய ரிங்க்டோனுக்காக வெட்டுனேன். சரி பதிவுல போட்டா மத்தவங்களுக்கும் உபயோகமா இருக்குமேன்னு இங்க கொடுத்துருக்கேன். கீழ இருக்குற  ப்ளே பொத்தான க்ளிக் பண்ணி கேட்டுப்பாருங்க. புடிச்சுருந்தா பதிவிறக்குங்க சுட்டில Right Click -> Save Target As மூலமா பதிவிறக்கம் (download) பண்ணி உங்க மொபைல்ல ரிங்க்டோனா வச்சுக்கலாம்.

காற்றின் மொழி (ப்யானோ)  – மொழி  [பதிவிறக்குங்க]
ஒரு நாளில் (வயலின்)  – புதுப்பேட்டை  [பதிவிறக்குங்க]
உனக்குள் நானே (வயலின்)  – பச்சைக்கிளி முத்துச்சரம்  [பதிவிறக்குங்க]

Posted in மத்தது எல்லாமே | 1 Comment »

கூட்டாளி…

Posted by ரத்தன் மேல் ஏப்ரல் 28, 2007

கொஞ்ச நாளைக்கு முன்னால யோகி.பி மற்றும் நட்சத்திரா ன்னு ஒரு மலேசிய தமிழ் ஹிப்-ஹாப்/ராப் ட்ரூப் நம்ம இசைஞானி இளையராஜாவோட மடைதிறந்து பாட்ட ரீ-மிக்ஸ் பண்ணி கலக்குனது மறக்கமுடியுமா! அந்த ட்ருப்ல இருக்கிற டாக்டர் பர்ண் மற்றும் குணாவோட இன்னொரு ரீ-மிக்ஸ் பாட்டு இதோ இங்க. பாட்டோட கரு நட்பு. கொஞ்சம் கேட்டுத்தான் பாருங்களேன்.

kootalicalvin.jpg

Posted in டூரின் டாக்கீஸ் | 7 Comments »

வீட்டுக்குள்ள சுனாமி!

Posted by ரத்தன் மேல் ஏப்ரல் 19, 2007

சில நேரங்கள்ல சினிமாவுல வர்ற காமெடியெல்லாம் தூக்கி சாப்பிடுற அளவுக்கு மெகா காமெடி விஷயங்கள் நம்ம வாழ்க்கைல நடக்கறதுண்டு. அந்த மாதிரி விஷயங்கள எப்ப நெனச்சா பாத்தாலும் நம்மல அறியாம நமக்கு சிரிப்பு பொத்துக்கிட்டு வந்திடும். அந்த மாதிரி என் வாழ்க்கைல நடந்த ஒரு குபீர் காமெடி சம்பவம்தான் இது.

சென்னைல வேல பாத்துகிட்டு இருந்த காலம் அது (2005).  என்கூட படிச்ச ப்ரதீப் (பிட்டு), ராஜேஷ், சபரினாத்(மாமா) எல்லாரும் ட்ரஸ்ட்புரத்துல ஒரு சிங்கிள் பெட்ரூம் வீட்ல வாடகைக்கு தங்கிருந்தோம். ஏற்கனவே தங்கிருந்த சூளைமேடு வீட்ல தண்ணி பிரச்சனை தல விரிச்சி ஆடினதால கிட்டதட்ட மூணு நாலு மாசமா வீடு தேடி கடைசியா இந்த வீட்ட புடிச்சோம். புதுசா கட்டுன வீடு அது. மாடில வீட்டு காரவங்க இருந்தாங்க. கீழ இருக்கிற இரண்டு வீட்ல நாங்க ஒரு வீட்ல இருந்தோம். சின்ன வீடா இருந்தாலும் புதுசா கட்டினதுங்கரதுனால ஓ.கே. பண்ணிட்டோம். வீட்டுக்கு போய் கொஞ்ச நாள்ல டி.வி, வாஷிங்மெஷின் லாம் வாங்கி பட்டய கிளப்பிட்டுருந்தோம்.

மாசத்துல இரண்டு தடவையாவது வீட்ட சுத்தம் பண்ணலேன்னா என்னால இருக்கவே முடியாது. வீட்ட சுத்தம் பண்ணனும்னு சொன்னாலே பசங்க ஏன்டா இப்படி சாவடிக்கற ன்னுவானுங்க. அந்த வாரம் எவ்வளவோ சொல்லியும் ராஜேஷ் அதெல்லாம் அடுத்த வாரம் பண்ணிக்கலாம் ன்னு சொல்லிட்டான். சரின்னு நானும் விட்டுட்டேன்.  வீக்கென்ட்கிறதால சபரிநாத் மதுரைக்கு போயிருந்தான். நான், ராஜேஷ், பிரதீப் மூணு பேர் தான் இருந்தோம். சன்டே நைட் திடீர்னு படத்துக்கு போலாம்னு முடிவு பண்ணோம். அப்ப எங்களோட ஃபேவரைட்  சத்தியம் தியேட்டர் தான். என்ன படம்னு எனக்கு சரியா நியாபகத்துல இல்ல. ஏதோ இங்கிலீஷ் படம்ன்னு மட்டும் நியாபகம் இருக்கு.

படம் முடிச்சிட்டு வீட்டுக்கு வர நைட் 12:00 மணி கிட்ட ஆயிடுச்சு. வீட்டுக்கு வந்தவுடனே ராஜேஷ் பாத்ரூம் போய் கொழாயத் தொறந்தான். க்ரீச்.. க்ரீச் ன்னு சவுண்டோட தண்ணி லேசா வந்துகிட்டு இருந்தது. கொஞ்ச நேரங்கழிச்சு புஸ்ஸுன்னு காத்துதான் வந்தது, அதுவும் கொஞ்ச நேரத்துல நின்னு போச்சு. இந்த நேரத்துல மோட்டர் போட்டா வீட்டுக்காரவங்க எந்திரிச்சுருவாங்கன்னு அப்படியே விட்டுட்டோம். வழக்கமா முன்ரூம்ல நானும், ராஜேஷும் தூங்குவோம். முதுகுவலிப் பிரச்சனைங்கிறதால உள்ரூம்ல பெட்லதான் ப்ரதீப் தூங்குவான். அன்னிக்கும் அப்படிதான் தூங்குனோம். நானும், ராஜேஷும் கொஞ்ச நேரம் டி.வி பாத்துட்டு தூங்கிட்டோம்.

காலைல மணி ஆறு ஆறரை இருக்கும். ராஜேஷ் என்ன ஆக்ரோஷ்மா எழுப்ப முயற்சி பண்ணிக்கிட்டு இருந்தான். பதரி அடிச்சிட்டு எந்திருச்சிப் பாத்தா முன்ரூம் முழுக்க தண்ணி. பேப்பர் கப்பல் செஞ்சி விடலாம், அந்த அளவுக்கு தண்ணி. படுத்துருந்த பாய், பொத்திருந்த பெட்ஷீட், போட்டிருந்த துணி உட்பட நானும் ஃபுல்லா நெனஞ்சிருந்தேன். இது எல்லாம் நடக்கற வரையும் வாயப் பொலந்து தூங்கிக்கிட்டு இருந்திருக்கேன். எங்க அம்மா எங்கிட்ட வீட்டுக்குள்ள வெள்ளமே வந்தாலும் உன்ன தூக்கத்துல இருந்து எழுப்ப முடியாதுடா ன்னு அடிக்கடி சொல்லுவாங்க. அது உண்மதான்னு அன்னிக்குதான் புரிஞ்சுது!

என்னாடா ஆச்சு ன்னு தூக்க கலக்கத்துலயே ராஜேஷக் கேட்டேன்.

ம்ம்ம்… வீட்டுக்குள்ள சுனாமி வந்திருச்சு… ன்னு நக்கலா பதில் சொன்னான்.

அங்கிட்டும், இங்கிட்டும் திரும்பி பாத்தேன்.  பாத்ரூம் பக்கெட்ல இருந்து தண்ணி நிரம்பி வழியிரத பாத்ததுக்கு அப்பறம் தான் புரிஞ்சது என்ன நடந்திருக்கும்னு.

அய்யய்யோ… யார்ரா மோட்டர போட்டது ன்னு கேட்டேன்.

எனக்கென்னாடா தெரியும்… விடிஞ்சிருச்சுல்ல  எவனாவது போட்டுருப்பாய்ங்க ன்னான் ராஜேஷ்.

நல்ல வேல என் லாப்டாப்ப ஒரு அட்டபெட்டிக்கு மேல வச்சிருந்த்துனால தப்பிச்சது. இல்லாட்டி சங்குதான். எங்களோட பெட்டி எல்லாமே உள்ரூம்ல இருக்கிற கட்டிலுக்கு கீழதான் இருக்கும். உள்ரூம்ல தண்ணி அவ்வளவா போகல. இருந்தாலும் பெட்டி உள்ள இருக்குங்கிறதால தண்ணி போக விடாம கையால தள்ளுகிட்டு இருந்தோம். கட்டில்ல படுத்திருந்ததால ப்ரதீப்  சேஃபு. அவனயும் எழுப்பி விட்டோம்.

எந்திருச்சு பாத்த அவன் என்னாடா இது! ன்னான்.

நைட்டு கொழாய மூடாம படுத்துட்டியாடா ன்னு ராஜேஷ பாத்து கேட்டான். அவனுக்கு ஒரு வெளக்கம் சொல்லிட்டு தண்ணில நெனஞ்சது, நெனயாததுன்னு ஒவ்வொன்னா எடுத்தி வச்சிகிட்டு இருந்தோம்.

எப்படா பாத்த ன்னு ராஜேஷ கேட்டேன்.

அதுக்கு ரரஜேஷ் தூங்கிட்டு இருக்கும் போது திடீர்னு கைல ஏதோ தண்ணி பட்ட மாதிரி இருந்துச்சு… சரி தொடக்கலாமேன்னு லுங்கில கைய வச்சா லுங்கி ஃபுல்லா நெனஞ்சு போயிருந்தது. எந்திருச்சு பாத்தா… வீடு ஃபுல்லா தண்ணி! ன்னான். அரக்கபரக்க வேல பாத்துகிட்டு இருந்த நானும் ப்ரதீப்பும் அத கேட்ட உடனே சிரிச்சிட்டோம். அவன் பதில் சொன்ன தோரணைய நெனச்சா இன்னக்கும் விழுந்து விழிந்து சிரிச்சுக்கிட்டு இருப்பேன்.

அப்பறம் ராஜேஷ் தண்ணிய ஃபுல்லா வெளக்கமாத்தால கூட்டி தள்ளிகிட்டு இருந்தான். அத பாத்து நான் ஒழுங்கா நான் சொன்னப்பவே வீட்ட க்ளீன் பண்ணிருக்கலாம்ல… இப்ப பாரு கடவுளா பாத்து தண்ணி ஊத்தி க்ளீன் பண்ண வச்சிட்டாரு ன்னு சொல்லி கலாய்ச்சிகிட்டு இருந்தேன்.

எல்லா என் நேரன்டா… ன்னு சலிச்சுக்கிட்டான் ராஜேஷ்.

வீடு ஃபுல்லா க்ளீன் பண்ணிட்டு வீட்டுக்கு வெளில தண்ணிய தள்ளி விடும்போது வீட்டுக்காரம்மா பாத்துட்டாங்க. என்னப்பா இவ்வளவு தண்ணின்னு அந்தம்மா கேக்க போகுதுன்னு நெனச்சிக்கிட்டு இருந்தா… பரவாயில்லியே… வீட்ட தண்ணி ஊத்தி கழுவி விடரீங்களே! நல்ல பொருப்பான பில்லங்கதான் னு சொல்லிட்டு போயிட்டாங்க. ராஜேஷ் என்னயும், ப்ரதீப்பயும் திரும்பி ஒரு பார்வ பாத்தான். எங்களுக்கு தாங்க முடியாத சிரிப்பு. வீட்டுக்குள்ள வந்து விழுந்து விழுந்து  சிரிச்சிகிட்டு இருந்தோம். எல்லாத்தயும் ஒழுங்கு பண்ணி முடிக்க கிட்டத்தட்ட காலைல பத்து மணி ஆயிடுச்சு. ஆபீஸ் போய் என்னோட ஃபிரண்ட்ஸ் கிட்ட இத சொல்லி சொல்லி சிரிச்சிக்கிட்டுருந்தேன்.

நான் அமெரிக்கா வந்ததுக்க அப்பரமும் மத்த மூணு பேரும் இன்னும் அதே ரூம்லதான் இருக்காங்க. ராஜேஷ் அப்பப்ப ரூம க்ளீன் பண்றானோ இல்லியோ டெய்லி தூங்கறதுக்கு முன்னாடி கண்டிப்பா கொழாய் மூடிருக்கான்னு பாத்துட்டுதான் தூங்குவான்னு நெனக்கறேன் 🙂

water.jpg

Posted in என் நினைவுகள், தமாசு... தமாசு... | 10 Comments »

தமிழில் ஒரு இயங்குதளம் (OS)

Posted by ரத்தன் மேல் ஏப்ரல் 15, 2007

உபுண்டு – இது யுனிக்ஸ்யை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட ஒரு இயங்குதளம் (Operating System). இது கட்டற்ற (Free Software) மற்றும் திறந்த மூல (Open Source) மென்பொருட்களைக் கொண்டு உருவாக்கப் பட்ட இயங்குதளம். எண்ணற்ற வல்லுனர்களின் துணையால் இன்று ஆலமர வளர்ச்சி அடைந்து நிற்கின்றது. இதனைப்பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே சுட்டுக – > உபுண்டு.

இந்த உபுண்டு இயங்குதளம் முழுமையாகத் தமிழில் கிடைக்க  தமிழார்வம் கொண்ட ஒரு குழு இயங்கி வருகின்றது. உபுண்டு தமிழ் குழுமம் இதன் பெயர். கணிப்பொறியியல்  துறையைச் சார்ந்த, சாராத சிலரின் கூட்டு முயற்சியே இந்த குழுமம். வாரம் இரு முறை இணையத்தின் உதவியால் இவர்களின் கருத்துப் பரிமாற்றம் நடைபெற்று வருகின்றது. இந்த இயங்குதள உருவாக்கத்தின் முதல் முயற்சியாக உபுண்டுவினுள் உள்ள அனைத்து ஆவணங்களையும் தமிழுக்கு மொழி மாற்றம் செய்யும் வேலையில் ஈடுபட்டுள்ளது இந்த குழுமம். தமிழார்வம் கொண்ட எவரும் இந்த குழுமத்தில் சேரலாம். இந்த செய்தி இன்னும் பல தமிழார்வம் கொண்டவர்களின் செவிகளுக்கு எட்டுமாறு செய்யுங்கள்.  மேலும் விவரங்கள் அறிய இங்கே சுட்டுக – > உபுண்டு தமிழ்.  இனி என் வலைப்பதிவில் உபுண்டு தமிழ் வலைப்பதிவிற்கென ஒரு சுட்டி நிரந்தரமாக இருக்கும்.

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்கும் காணோம்
பாமரராய் விலங்குகளாய் உலகனைத்தும்
இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு
நாமமது தமிழரெனக் கொண்டிங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்.

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தற் வேண்டும்
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை யில்லை
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்.

 – மகாகவி சுப்பிரமணிய பாரதியார்

Posted in உபுண்டு - தமிழ் | 1 Comment »

புஷ்ஷுக்கு எதிரான கோஷம்

Posted by ரத்தன் மேல் ஏப்ரல் 13, 2007

டவுண்டவுன் ல ஆபீஸ் இருந்தா ரொம்ப இம்சைங்க. ஆத்திர அவசரதுக்கு கார எடுத்துக்கிட்டு வெளில போக முடியாது. எங்க பாத்தாலும் ஒரே ட்ராபிக்கா இருக்கும். எந்த ரோடு ஒன் வே எது டு வே ன்னே தெரியாது. அதவிட பெரிய கொடும பார்க்கிங் லாட்டே கிடைக்காது. அப்படியே கிடச்சாலும் அந்த கூட்டத்துல பேரளல் பார்க்கிங் பண்ணனும். அதுவும் பார்க்கிங் மீட்டர்ல வெரும் க்வாட்டர் டால்ர் காயின் தான் போட முடியும். இவ்வளவும் தெரிஞ்சிருந்தும் இன்னக்கி பெரிய இவம்மாதிரி “அம்மா, இன்னக்கி நான் வெளில சாப்பிட்டுக்கறேன்” னு சொல்லிட்டு வந்துட்டேன்.  மனசுக்குள்ள அப்பப்ப “மவனே உனக்கு இருக்குடி. அம்மா இந்தியா போனதுக்கு அப்பறம் தினமும் சமச்சே சாவப்போறே”ன்னு தோனும்.

7ஆவது மாடில பார்க் பண்ணிருக்கற என்னோட கார எடுத்திகிட்டு குஸிணோஸ் சப்ஸ் போலாம்னு கிளம்பினேன். வழக்கம் போல பாதைய மறந்துட்டேன். ஒரு வழியா கண்டுபிடிச்சி கடைக்கு பக்கத்துல போனா எதிர்பாத்த மாதிரியே பார்க்கிங் கிடைக்கல. ஒரு அஞ்சி நிமிஷம் ரவுண்டு அடிச்சதுக்கு அப்பறம் ஒரு லாட் கிடச்சது. இப்ப அடுத்த பிரச்சன “பேரளல் பார்க்கிங்” பண்ணனும். ம்ம்ம்… லைசன்ஸ் வாங்கினப்ப போட்டு காமிச்சது.  ஒரு வழியா தட்டு தடுமாறி வண்டிய பார்க் பண்ணிட்டு போய் திருப்தியா சாப்பிட்டேன். 

ஆஸ்டின் நகரம் டெக்ஸாசோட தலைநகரம்ங்கிறதால ஸ்டேட் கேப்பிட்டல் பில்டிங் இங்கதான் இருக்கு.  டவுண்டவுன் மத்தியில  பிரம்மாண்டமா, கம்பிரமா, அழகா பரந்து விரிஞ்சு இருக்கு. அதுக்கு பக்கத்துல தான் இந்த கடை. சாப்பிட்டு முடிச்சு கார எடுத்திட்டு கிளம்புனதும் ஒரு சிக்னல். ஸ்டேட் காப்பிட்டல் பில்டிங்குக்கு நேர் எதிர்ல சிக்னலுக்கு முன்னாடி கார்ல உக்காந்திட்டு இருந்தேன். அப்ப பக்கத்துல ஒரு பெரியவரு ஒரு பெரிய போர்ட்ல ஏதோ எழுதி வச்சி நின்னுகிட்டுருந்தது கண்ணுல பட்டுச்சு. அதுல எழுந்திருந்த முதல் வார்த்தைய படிச்சவுடனே ஆரம்பிச்சிட்டீங்களாடா ன்னு நெனச்சேன். முழுசா படிச்சுப்பாத்ததும் ரொம்ப ஆச்சர்யப்பட்டேன். அதுல அதிபர் புஷ் பத்தி தகாத வார்த்தைகள்ல எழுதிருந்தது. மொபைல் கேமராவில இத ஒரு போட்டோ எடுத்தா என்னன்னு நினைக்கும் போது இது வரையும்  சிகப்புல இருந்த சிக்னல்,   பளீர் னு பச்சைக்கு மாறிடுச்சி. வண்டிய ஒட்டிக்கிட்டே வர்ற வரையும் வரட்டும்! ஒரு ட்ரை குடுக்கலாம்னு க்ளிக் பண்ணினேன். பாத்தா போட்டோ நான் எதிர்பார்த்தத விட நல்லாவே வந்திருந்தது.  இதோ அந்த போட்டோ கிழே உங்களுக்காக.

calvingraphics.jpg
13042007.jpg

போட்டோ பெருசா தெரியணும்னா இந்த குட்டி போட்டோவ க்ளிக் பண்ணுங்க.

ஆபீஸ் போய் சேர்ந்ததுக்கு அப்பரம் கொஞ்ச நேரம் கழிச்சு என் மனசுக்குள்ள இந்த மாதிரி நம்ம ஊர் சிக்னல்ல எவனாவது ஆளுங்கட்சிக்கு எதிரா எதாவது எழுதி நின்னுகிட்டு இருந்தா என்ன ஆகும் னு நெனச்சேன். லேசா ஒரு சிரிப்பு சிரிச்சுட்டு என்னோட அபீஸ் வேலய பாக்க ஆரம்பிச்சுட்டேன்.

Posted in என் நினைவுகள், நாட்டு நடப்பு | 3 Comments »

இன்னும்மாய்யா நீங்க திருந்தல?

Posted by ரத்தன் மேல் ஏப்ரல் 9, 2007

மும்பை, ஏப் 9: உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் கேவலமாக விளையாடி நாடு திரும்பியுள்ள இந்திய அணியை சீர் செய்ய பல்வேறு நடவடிக்கைகளை வாரியம் அறிவித்துள்ளது.அதில் முக்கியமானது, விளம்பரப் படங்களில் நடிக்க விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்.  இதோ அவை

 • ஒரு வீரர் ஒரு போட்டித் தொடருக்கு 3 நிறுவனங்களுக்கு மட்டும் நடிக்கலாம்.
 • போட்டிக்கு 15 நாட்களுக்கு முன்பே விளம்பரப் படங்களில் நடித்து முடித்து விட வேண்டும்.
 • மேலும் விளம்பரப் படங்களில் நடிப்பதற்கும், விளம்பரங்களில் ஒப்பந்தமாவதற்கும் கிரிக்கெட் வாரியத்தின் முன் அனுமதியையும் வீரர்கள் பெற வேண்டும்.

இதனால் சகட்டு மேனிக்கு விளம்பரப் படங்களில் நடித்து வரும் மூத்த வீரர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக சச்சின் டெண்டுல்கருக்கு கிட்டத்தட்ட ஆண்டுக்கு ரூ. 15 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்படும் எனக் கூறப்படுகிறது.

இதனால் டிராவிட், சச்சின் உள்ளிட்ட மூத்த வீரர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்தக் கட்டுப்பாடுகளை நீக்கக் கோரி கேப்டன் டிராவிட், வாரிய நிர்வாகத்திடம் பேசத் திட்டமிட்டுள்ளார்.

ஆனால் வீரர்கள் விளம்பரக் கட்டுப்பாடு குறித்து கவலைப்படுவதை விட்டு விட்டு விளையாட்டில்தான் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என கிரிக்கெட் வாரிய பொதுச் செயலாளர் நிரஞ்சன் ஷா காட்டமாக கூறியுள்ளார். 

இம்புட்டு அசிங்கப்பட்டதுக்கு அப்பறமுமாய்யா நீங்க திருந்தல.

Posted in நாட்டு நடப்பு | 3 Comments »

மொழி – என் பார்வை

Posted by ரத்தன் மேல் ஏப்ரல் 8, 2007

ராதாமோகன் எடுக்கற அடுத்த படத்துல ஜோ வாய் பேச, காது கேக்க முடியாத கேரக்டர்ல நடிக்கறாங்கன்னு  சந்திரமுகி ரிலீஸாயி கொஞ்ச நாள் கழிச்சு நான் கேள்விப்பட்டேன். அப்பவே எனக்கு எதிர்பார்ப்பு அதிகமாயிடுச்சு. காரணம் அழகிய தீயே, பொன்னியன் செல்வன் ராதாமோகன் எடுத்திருந்த விதம் + என்னோட ஃபேவரைட் ஜோ 🙂. அந்த எதிர்பார்ப்ப கொஞ்சம் கூட ஏமாத்தாம மொழியாக் குடுத்துருக்காரு ராதாமோகன். ரொம்ப ஆரோக்கியமான சினிமாவும் தமிழ்ல தொடர்ந்து ஜெயிக்கும்னு ப்ரகாஷ்ராஜ்/ராதாமோகன் வச்ச நம்பிக்கை வீண் போகல. ரெண்டு பேருக்குமே ஒரு சபாஷ். தொடர்ந்து ஜெயிக்க வாழ்த்துக்கள்.

mozhi.jpg

ஒரு காது கேக்க, பேச முடியாத ஹீரோயினுக்கும், இசைக் கலைஞனா இருக்கிற ஹீரோவுக்கு நடக்கற காதல் கதைதான் படம். இதக்கேட்ட உடனே படம் ஒரே ரொமான்டிக்கா, பொயட்டிக்கா இருக்குமோன்னு தான் நம்மல்ல பலர் நினப்போம். ஆனா இந்த படத்த ரொம்ப எளிமயா, கலகலப்பாவும் குடுக்க முடியும்னு சாதிச்சு காட்டிருக்காறு ராதாமோகன்.

 • படம் ஆரம்பிச்சு கொஞ்ச நேரத்துல தியேட்டரே கலகலன்னு கல்யாண வீடு மாதிரி ஆயிடுது. நடுவுல கொஞ்சம் இலுக்கற மாதிரி இருந்தாலும் ரசிக்கும்படியாவே இருக்கு. படத்துல பெரும்பாலான காட்சிகள்ல (70%) காமெடி தான். எல்லா காமெடியும் ரொம்ப இயல்பா கதையோட வந்து போறது படத்தோட பெரிய ப்ள்ஸ்.
 • ப்ரித்திவிராஜ் நல்ல தேர்வு. ரொம்பவே நல்லா நடிச்சிருக்காரு. எனக்கு காமெடியும் வரும்னு ப்ரகாஷ்ராஜ் ஒரு கை பாத்திருக்காரு. படத்துல நெறய கைத்தட்டல் வாங்குறது இவருதான். பெருசா காமெடிக்கின்னு எந்த கேரக்டர்ஸும் இல்ல. போடனுமேன்னு தெலுங்கு புகழ் பிரம்மானந்தத்த போட்டுருக்காங்க. மனுஷன பாத்தாலே நம்க்கு சிரிப்பு பிலிருக்கிட்டு வருது. புகுந்து விளையாடிருக்காரு. இந்த படத்துல ஜோவ பாத்தீங்கன்னா ஒரு காலத்துல ஓவர் ஆக்டிங் பண்ணின அந்த ஜோவா இதுன்னு தோனும். எங்கிட்ட ஜோவ பத்தி கிண்டல் பண்ணின நெறய பேர் நெஜமாவே சூப்பரா நடிச்சிருக்காடான்னு சொன்னாங்க. ஸ்வர்ணமால்யாவுக்கு அலைபாயுதேவுக்கு அப்பறம் நல்ல ரோல். நல்லா நடிச்சிருக்காங்க. இவங்க எல்லாரயும் விட நான் ரொம்ப ரசிச்ச கேரக்டர் ப்ரபெஸரா வர்ற எம்.எஸ்.பாஸ்கர். 1984ல நடக்கற விஷயத்த பத்தி சொல்லி சொல்லி சிரிக்க வச்சாலும் ஒன்னு ரெண்டு சீன்ல கண்கலங்க வச்சிர்றாரு. கலக்கிட்டீங்க பட்டாபி!
 • படத்தோட இன்னொரு பெரிய ப்ள்ஸ் விஜியோட வசனங்கள். ரொம்ப யதார்த்தமான சிரிக்க வக்கக்கூடிய அதே நேரத்துல அட போட வைக்ககூடிய வசனங்கள். அழகிய தீயே, பொன்னியின் செல்வன் க்கும் கூட இவர் தான் வசனகர்த்தாவாம். தமிழ் சினிமாவுக்கு இரட்டை அர்த்தம் இல்லாத, நல்ல வசனமும் எழுத முடியும்னு மூணாவது படத்துலயும் நிரூபிச்சிருக்காரு. நான் ரொம்ப ரசிச்ச வசனங்கள் சில இதோ
  • நீ பேச்சரல்னா வீடுதான் குடுக்க மாட்டேங்கறான்… நான் பேச்சரல்னா பொண்ணே குடுக்க மாட்டேங்கறான்டா.
  • அவன் அவன் கல்யாணத்த ஆகாயத்துல வக்கறான், பூமிக்கு அடில வக்கறான், நான் சர்ச்சுல தானேன்னு ஒ.கே சொல்லிட்டேன்.
  • ஸ்வர்: நீங்க சி.பி.ஐ ன்னு நான் எப்படி நம்பறது. பிரகா: நல்ல கேள்வி. நான் நடந்து போரேன். நீங்க சி.பி.ஐ ன்னு கூப்பிடுங்க நான் திரும்பிப் பாப்பேன்.
 • இசையப்பத்தி கண்டிப்பா சொல்லியே ஆகனும். தமிழ் சினிமால எவ்வளவு ஆர்ப்பாட்டமா குத்துப்பாட்டுக்கள் வந்தாலும் தன்னோட பானில எல்லா படத்திலயும் ஒரு மெலடி பாட்டு குடுக்கற வித்யாசாகர் இந்த படத்துல எல்லா பாட்டையுமே மெலடியா குடுத்திருக்காரு. இன்னொரு ஸ்பெஷல், எல்லாமே சோலோ பாடல்கள். அதுவும் வேறவேற சிங்கர்ஸ். பிரம்மானந்தம் பிரகாஷ்ராஜை முழுசா பாக்கற அந்த சீன்ல ஒலிக்கற அந்த ரிதம்மிக் பிண்ணனி இசை நம்ம சிரிப்ப இன்னும் அதிகமாக்குது. பிண்ணனி இசை முடிஞ்சு எல்லாரும் கைத்தட்டற மாதிரி வர்ற அந்த இடத்துல பிரம்மானந்ததோட அந்த எக்ஸ்பிரஷன் அய்யய்யோ! மரண காமெடிங்கோ!
 • பாடல் வரிகள் பாட்டுக்கு பெரிய முதுகெலும்பு. ஒவ்வொரு பாட்டும் அவ்வளவு அர்த்தமுள்ளதா அழகா எழுதிருக்காரு நம்ம கவிப்பேரரசு. காற்றின் மொழி… பாட்ட கேட்டா வைரமுத்துவால மட்டும்தாய்யா இப்படில்லாம் எழுதமுடியும்னு சொல்லுவீங்க. ராதாமோகன் முழு சுகந்திரம் குடுத்திட்டாறாம்.
 • ப்ரித்திவிக்கும், பிரகாஷ்ராஜுக்கும் லவ் ஆரம்பிக்கும் போது தலைக்கு மேல ப்ல்பு எரியறது மணி அடிக்கறது எல்லாம் நமக்கு சிரிப்ப வரவச்சாலும், கிளைமாக்ஸ்ல ப்ரித்திவியும் ஜோவும் சர்ச்சுக்கு வெளில ஒண்ணு சேர்ற அந்த காட்சில சர்ச்ச அலங்கரிக்க போட்டிருந்த மொத்த சீரியல் செட் லைட் எரிஞ்சு, சர்சோட ஆலயமணி அடிக்கும் போது நம்மலயே அறியாம புல்லரிச்சி போயி சூப்பர்ல் ன்னு சொல்ல வக்குது.

தியேட்டர விட்டு வெளில வர்ற எல்லாரும் இந்த மாதிரி ஒரு தமிழ் சினிமா குடும்பத்தோட பாத்து எவ்வளவு நாள் ஆச்சு ன்னு பெருமூச்சு விடறாங்க. மொழி ஆடியோ வெளியீட்டு விழாவுல பிரகாஷ்ராஜ் சொன்னது.

நம்ம சில நேரங்கள்ல செய்ற சில விஷயத்தினால நம்மலோட மனசு ரொம்ப சந்தோஷமா, நிறைவா இருக்கும். அது எனக்கு இந்த படம் எடுத்ததுக்கு அப்பறம் கிடைச்சிருக்கு.

பிரகாஷ்ராஜ் சார் எங்களுக்கு இந்த படம் பாத்ததுக்கு அப்பறம் அந்த மாதிரி இருக்கு சார் னு சொல்லத்தோனுது.

                                                                                                                                                                    –     ர த் த ன்

Posted in சினிமா, திரைப்பார்வை | 8 Comments »

ஏதோ எனக்கு தெரிஞ்சது…

Posted by ரத்தன் மேல் ஏப்ரல் 6, 2007

அடிக்கடி தாடி, மீசை சேவ் பண்ணினா நெறய முடி வளரும்னு நெனச்சா அது உங்க முட்டாத்தனம்… இத நான் சொல்லலீங்க… அதிகம் படிச்ச டாக்டர்ஸ்…

அந்த காலத்திலயே சாப்பாட பதப்படுத்தி டப்பால அடச்சு போருக்கு அனுப்பிச்சி வச்சாராம் நம்ம “மாவீரன் நெப்போலியன்”.

உலகம் முழுக்க ஒரு வருஷத்துக்கு 40 லட்சம் டன் உப்பு தேவப்படுதாம்…

 —

லாட்டரிக்கு பேர் போன “பூட்டான்”ல சினிமாத் தேட்டரே கிடையாதாம்…

 —

ஆரஞ்சு நிறம் மனசுக்கு மகிழ்ச்சியத் தருமாம்.

நம்ம டைரக்டர் அமீர் இது வரையும் அவர் எடுத்த படம் ஒன்னக்கூட பாத்தது இல்லியாம்.

நடிகர் பிரகாஜ்ராஜும் நம்ம இந்நாள் கேப்டன் (சத்தியமா அடுத்து யாருன்னு எனக்கு தெரியாதுங்கோ) ராகுல் திராவிட்டும் ஒரே காலேஜாம். பிரகாஜ்ராஜ் சீனியராம்.

செவ்ரலே எஸ்.ஆர்.வி காரோட  ஹெட் லைட் வண்டி திரும்பற திசைக்கேத்த மாதிரி ஆங்கிள்ல திரும்புமாம்… சூப்பர்ல…

               

                                                                                                                                                       –  தொ ட ரு ம்

Posted in உங்களுக்கு தெரியுமா | Leave a Comment »

இலங்கை கடற்படை மீண்டும் அட்டகாசம்: நாகை மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு

Posted by ரத்தன் மேல் ஏப்ரல் 6, 2007

ஏப்ரல் 06, 2007

நாகப்பட்டனம்: கோடியக்கரை அருகே நடுக் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்ட மீனவர்கள் மீது இலங்கை கடற்படை இன்று அதிகாலை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு மீனவர் காயமடைந்தார்.

தமிழக மீனவர்களை குறி வைத்து சமீப காலமாக இலங்கை கடற்படையினர் கண்மூடித்தனமாக சுடுவது அதிகரித்து வருகிறது. கடந்த 2 மாதங்களில் மட்டும் 10 மீனவர்கள் வரை கொல்லப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக தமிழக அரசும், தமிழக அரசியல் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மத்திய அரசு இதில் தீவிரமாக செயல்பட்டு இலங்கையை கடுமையாக கண்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளன.

ஆனால் மத்திய அரசின் சார்பில் இதுவரை ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எதுவும் இல்லை. மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சரான ஏ.கே.ஆண்டனியிடம் இதுகுறித்து கேட்டால், இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை சுட வேண்டிய அவசியம் இல்லை என்று இலங்கை அரசின் அமைச்சர் போல பதிலளிக்கிறார்.

இந்த நிலையில் இன்றும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளது. நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த 7 மீனவர்கள், 2 நாட்களுக்கு முன்பு கடலில் மீன் பிடிக்கச் சென்றனர்.

இன்று அதிகாலை அவர்கள் கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில், சண்முகவேல் என்ற மீனவரின் காலில் குண்டு பாய்ந்து காயமடைந்தார்.

திரும்பத் திரும்ப இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதால் தமிழக கடலோர மாவட்ட மீனவர்கள் கடும் கொதிப்படைந்துள்ளனர்.

Posted in நாட்டு நடப்பு | 4 Comments »